தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களாக மாவட்டத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த வாரம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து பெரியார் பிரதான கால்வாயின் கீழ் மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள விவசாய தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு  தண்ணீர் திறக்கப்பட உள்ளது.


மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் மேலூர் பகுதியில் உள்ள இருபோக நிலங்களில் ஒரு போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதி ஒரு போக பாசனத்திற்கு வினாடிக்கு 930 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.




ஏற்கனவே கள்ளந்திரி பகுதி விவசாயத்திற்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 930 கன அடி தண்ணீரையும் சேர்ந்து மொத்தமாக 1830கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணை நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.


தற்பொழுது அணையில் நீர் இருப்பு அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் 70.28 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அணைக்கு நீர்வரத்து 597 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 1830கன அடி நீர்  திறக்கப்பட்டுள்ளது.