பெண்கள் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது

 

மதுரை கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கு விடுதியில் கடந்த 12ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தங்கு விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்களான பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 45 சதவித தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விடுதி மேலாளரும், காப்பாளருமான புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 


 

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

 

இந்த தீ விபத்து தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மதுரை தீ விபத்தில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தீ விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

 

விபத்து நடைபெற்ற பெண்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் நேரில் ஆய்வு நடத்தினா். அப்போது  விபத்து நடந்த கட்டடத்திற்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, அது விடுதி உரிமையாளரிடம் வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தீ விபத்தில் கட்டடம் முழுவதும் சேதமடைந்த்தோடு, கட்டடம் பாதுகாப்பின்றி சேதமடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாக தீ விபத்து நடைபெற்ற கட்டடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் சம்மந்தப்பட்ட கட்டமானது இடிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது.

 

தொடர் நடவடிக்கை பாதுகாப்பு தேவை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்....,” மதுரையில் நடைபெற்ற தீ விபத்து தொடர்பாக, மற்றொரு பெண் இறந்துள்ளதார். இறந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாநகராட்சி தொடர்ந்து மெத்தனாமக இல்லாமல் சட்ட விரோதமாக செயல்படும் கட்டடங்களை இடிக்க வேண்டும். கட்டடங்களை இடிக்க மறுக்கும் உரிமையாளர்களின் கட்டடங்களை அதிரடியாக சீல் வைக்க வேண்டும். அதே போல் பெண்கள் தங்கு விடுதியில் அடிக்கடி ஆய்வு நடத்தி அவர்களுக்கு பிரச்னைகள் ஏதும் உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.