DMK Pavala Vizha: திமுக பவள விழா கொண்டாட்டத்திற்காக சென்னை நந்தனம் மைதானத்தில், தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


திமுக பவள விழா கொண்டாட்டம்:


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்ட, திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஒரு மாநில கட்சியாக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகித்து வரும் திமுக, தோன்றி 75 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இதையடுத்து,  செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனது ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது.


கோட்டை வடிவில் முகப்பு:


விழாவிற்காக, “ நந்தனம் மைதானத்தில் செஞ்சி கோட்டைக்கு இணையாக கோட்டை வடிவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் எல்இடி ஸ்க்ரீன்கள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான காட்சி அமைப்புடன் வரவேற்க 5000 வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. நந்தனம் கலைக் கல்லூரி மைதானம், டீச்சர் காலேஜ் மைதானம் உள்ளிட்ட 11 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


செயற்கை தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி உரை:


திமுக 75 வருடங்களாக கடந்து வந்த சாதனைகள், சோதனைகள் என அனைத்தயும் விளக்கும் விதமாக, 500க்கும் மேற்பட்ட வண்ண பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்ட கலைஞர் பதிப்பகத்தின் சார்பில் விற்பனை கூடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பவள விழாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் வந்து வாழ்த்தி உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விருது வழங்கும் நிகழ்வு:


விழாவில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அதன்படி, பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன் எம்பி.,, பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டு, அது எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது. இதுபோக, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கும் விதமாக,  மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான பண முடிப்பு வழங்கப்படுகிறது.