மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை திட்டம் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் எதும் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 



 

அப்போது இ-சேவை மையங்களில் பணிபுரியும் இரண்டு பணியாளர்கள் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடை பணியாளருடன் இணைந்து முறைகேடாக செயல்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு,  ஜெராக்ஸ் கடைக்காரர் முறைகேடாக கட்டணம் வசூல் செய்ததால்  காவல்துறையில் புகார் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் தனியார் கணினி மையங்களில் பொது இசேவை மையம் செயல்படுத்த முறையாக அரசு அனுமதி பெற வேண்டும் எனவும்,  அனுமதி பெறாமல் முற்றிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட (Citizen Portal) முறையினை தவறுதலாக பயன்படுத்தி வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் பெற்று பதிவேற்றம் செய்தாலோ அல்லது சேவைகள் தொடர்பாக விளம்பர பலகைகள் வைத்தாலோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



 

அரசு இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றுகள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 60ரூபாயும், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு 10ரூபாயும், இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு 50 ரூபாயும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பாமல் அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள். மகளிர் திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற அரசு இ-சேவை மையங்களை மட்டுமே அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர அதிக கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk.tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேரி எண் 1100 மற்றும் 18004251333 மூலமாகலோ புகார்களை தெரிவிக்கலாம்.

 

மதுரை மாவட்டத்தில் இ-சேவை மையத்திற்கான அரசு அங்கீகாரம் இல்லாத கணினி / ஜெராக்ஸ் மையங்களில் பொது மக்களுக்குரிய Citizen Portal முறையினை தவறாக பயன்படுத்தி கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.