மும்பையில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு இணையதள பக்கத்தில் ஹேக்கர்ஸ் ஊடுருவி பாஸ்போர்ட் பெறுவதற்கு சரிபார்ப்பு சான்றிதழ் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் என்ற இணையதளத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பம் சரிபார்ப்பு ( வெரிபிகேஷன்) செய்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24-ந் தேதி மும்பை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கீழ் இயங்கும் மும்பை பாஸ்போர்ட் சேவா இணையளத்தை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். அவர்கள் இந்த இணையதளத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை சரிபார்ப்பதற்கான பாஸ்வேர்ட் மற்றும் ஐ.டி.யில் ஊடுருவி உள்ளே சென்றுள்ளனர். பின்னர், மூன்று பேருக்கு மட்டும் உள்ளூர் காவல்துறையினரால் ஆவணம் சரிபார்ப்பு சான்றிதழை நற்சான்றிதழ் வழங்கி பூர்த்தி செய்துள்ளனர். இதன் அடிப்படையிலே பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்.
மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டு பாஸ்போர்ட் வெரிபிகேஷன் சான்றிதழ் அளிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் ஆன்டப் காவல் நிலைய எல்லைக்கும், மற்றொருவர் செம்பியம் காவல்நிலைய எல்லைக்கும், மூன்றாவது நபர் திலக் நகர் காவல்நிலைய எல்லைக்கும் உட்பட்டவர்கள் ஆவார்கள். இந்த சம்பவம் வெளியில் தெரியவந்ததையடுத்து, ஆசாத் மைடன் காவல்நிலையத்தில் கடந்த 7-ந் தேதி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெரிபிகேஷன் அளிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இணையதளத்தின் உள்ளேயே ஊடுருவி ஹேக்கர்ஸ் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் செய்த சம்பவத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடு செல்வதற்கான கட்டாய ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட் பெறுவதற்கு போலீசாரின் உத்தரவாத சான்றிதழ் மிக அவசியம் ஆகும். அதாவது, பாஸ்போர்ட் பெறும் நபர் மீதான எந்த குற்ற வழக்குகளும் பதிவாகவில்லை என்றும், அந்த நபரின் நம்பகத்தன்மை குறித்தும் காவல்துறையினர் உறுதி செய்து உத்தரவாதம் அளித்த பின்னரே கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
மேலும் படிக்க : crime: 18 வயது நிரம்பாத சக மாணவனுடன் காதல் திருமணம் செய்து கர்ப்பம்... போக்சோவில் கல்லூரி மாணவி கைது!
மேலும் படிக்க : Crime: சொத்து தகராறில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமனார் - தென்காசியில் பயங்கரம்