இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் அதற்கான கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநில அரசும் விதித்து வருகின்றன. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான், அப்படி இருக்கையில் அது சுற்றுச்சூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் கேடு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்று ஆளும் அரசுகள் விரும்புகின்றன. எனவே நேரக்கட்டுப்பாடு, சத்தம், புகை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தீ விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்..,”உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும். தமிழக அரசு உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை 1 மணி நேரமும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ விற்கவோ பயன்படுத்தவோ கூடாது. மேலும், சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ வெடிப்பதோ கூடாது.





பட்டாசு கடைகள், பட்டாசு குடோன்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது போலியான பொருட்களை குறைந்த விலைக்கு விற்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி உரிமமின்றி பட்டாசுகளை விற்பனை செய்தாலோ அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தாலோ அல்லது அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி வழக்குகள் பதிவு

செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.