தெற்கு இரயில்வே மதுரை கோட்டத்தைச் சேர்ந்த இரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் தேசிய விருது, மூவருக்கு கிடைத்துள்ளது.

 

இரயில்வே பணியில் உன்னதமாக  பணியாற்றும் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கு 2019-ஆம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய அளவில் 'உட்கிரிஷ்டா சேவா' மற்றும் 'அதி உட்கிரிஷ்டா சேவா' விருதுகள் வழங்கி வருகிறது. இந்த தேசிய விருதுகளுக்கு மதுரை கோட்டத்தில் பணியாற்றும் 3  ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

 



 

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரியும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் என்.விசாகரன், செங்கோட்டை தலைமை காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் டி.ஆறுமுக பாண்டியன், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படைவீரர் வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேசிய அளவிலான உட்கிரிஷ்டா விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

 



இன்றைய தலைப்பு செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 28.06.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

 

இதில் ஆறுமுக பாண்டியன் சிறந்த விளையாட்டு வீரர். இவர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இரயில்வே துறை குற்ற வழக்குகளை விரைவாக கையாண்டு சாதனை புரிந்துள்ளார். இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் விசாகரன் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு உதவுவது, இரயில்வே துறை சொத்துக்களை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



இது குறித்து இரயில்வே துறை உயர் அதிகாரிகள் சிலர் நம்மிடம்..,” இந்தியாவில் இரயில்வே துறையின் சேவை முக்கியமானது. அதிக ஊளியர்களை கொண்ட துறையில் பலரும் சேவை மனப்பான்மையோடு பணி செய்கின்றனர். பல்வேறு இரயில் விபத்துகளை தங்களது திறமையால் தவிர்த்துள்ளனர். பொது மக்களின் நண்பனாக இருந்து பல நேரங்களில் உதவிகள் செய்து பாராட்டுக்களும் பெற்றுள்ளனர். இந்நிலையில் தெற்கு இரயில்வேயின் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த இரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருந்துகள் பலரையும் ஊக்கப்படுத்தும். தொடர்ந்து நேர்மையாக பணி செய்யவேண்டும் என்ற நல் எண்ணத்தை விதைக்கும்” என பெருமையாக தெரிவித்தனர்.
 


தேசிய விருது பெற்ற விசாகரன், ஆறுமுக பாண்டியன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.