கொரோனா முழு ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகள் மூடி இருந்ததால், ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும்  நிகழ்வுகள் அரங்கேறின. இரயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில் கடத்தல், வலி நிவாரணிகளை போதை மாத்திரையாக உட்கொள்ளுதல், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்துதல் என பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை மத்திய சிறையில் காவலரே கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 



 

 மதுரை பெருங்குடி பகுதியில் வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை மடக்கிய காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோது ஆட்டோவில் சுமார் 60 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கி, 5 தோட்டா, ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவை பிடிபட்டது.  தப்பி ஓடிய அருண்குமாரின் மாமா முனியசாமி மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்து சோதனையில் 130 கஞ்சாவை கைப்பற்றினர். மொத்தம் 190 கிலோ கஞ்சாவை பிடித்த காவல்துறையின்  கஞ்சா விற்பனையில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் மதுரையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 




 

மதுரை தீடீர்நகர் பகுதியில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  தீடீர் நகர் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் தனராஜ் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில்  வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலவாசல் அங்கன்வாடி மையத்திற்கு பின்புறம் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு சட்ட விரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த மாமலை ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில் மேலும் பொன்மணி, சூர்யா, விக்னேஷ், அரிச்சந்திரன், பாலமுருகன் ஆகியோர் கஞ்சாவை கடத்தி மதுரை மாநகர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.  அவர்கள் பதுக்கி வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஏழு பேரையும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்பனை கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வெகுவாக பாராட்டினார்.

 



இது குறித்து காவல்துறையினர் சிலர்..,” 190 கிலோ கஞ்சா பிடிபட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையில் 24 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து இவர்களின் கூட்டாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். செல்போன் உதவியால் மதுரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் போனில் பேசியவர்கள் குறித்து விசாரணை நடத்தி மற்றவர்களையும் பிடிப்போம்” என்றனர்.