உருவாக்கப்பட்டவர்களும்,  உருவாக்கியவர்களும் !


அப்படின்னா என்னனு கேக்கறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க. சாக்பீஸ் பத்தின ஒரு சிறு கதைதான் இது.  பள்ளிகள் கல்லூரிகளில் பிளாக் போர்டுல எழுதுற சாக்பீஸ் தான் இது. இந்த சாக்பீஸ் பல நல்ல மாணவர்களையும்,  தலைவர்களையும் உருவாக்கியிருக்கும். எப்படின்னு கேட்குறீங்களா? ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் மட்டுமில்ல சாக்பீஸ் இல்லாட்டியும் வகுப்பறையில பாடமே நடத்த முடியாது. இந்த சாக்பீஸ் இல்லாம போர்டுல எழுதவும் முடியாது. வாத்தியார் வர்றதுக்கு முன்னாடியே சாக்பீச எடுத்து ஒளிச்சு வச்ச நினைவுகளும்  நிறைய பேருக்கு இப்பக் கூட கண்ணு முன்னாடி வந்துபோகும்


அதிலும் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது யாராவது ஒருவரை எழுப்பி அந்த பாடம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாத மாணவர் மேல வாத்தியார் கோபப்பட்டு கையில் இருக்கும் சாக்பீஸதான் முதல்ல தூக்கிப்போடுவாரு. அப்படி சாக்பீஸ் பலரது வாழ்க்கையில ஒரு முக்கிய இடத்த பிடிச்சுருக்கும். இந்த சாக்பிஸ்சால, பாடம் நடத்தப் பட்டு எண்ணிலடங்காத மாணவர்களையும், இதிலிருந்து நல்ல தலைவர்களையும் கூட உருவாக்கியிருக்குன்னு சொல்லலாம். இப்படி இந்த சாக்பீஸ்சால உருவாக்கப்பட்டவர்கள் நிறையபேர். ஆனால் இந்த சாக்பீஸ் உருவாகும் கதையும் அதை உருவாக்குவர்கள் பற்றியும் உங்களுக்கு தெரியுமா..?




இந்த சாக்பீஸ் சிறு தொழிலான குடிசைத் தொழில்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டதால இந்த சாக்பீஸோட தேவை இல்லாம போயிடுச்சு. சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் இங்க முற்றிலும் முடங்கிப் போச்சு .இது ஒரு குடிசைத் தொழில் தான் இதுல கிடைக்கிற ஒரு சின்ன சின்ன வருமானத்த வச்சுதான், தங்கள் வாழ்க்கையை நடத்தி  வந்தார்கள் இதனை தயாரிக்கும் தொழிலாளர்கள். இந்த கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு எல்லாம் இந்த குடிசைத் தொழில்களையும் விட்டு வைக்கல. அப்படி இந்த சாக்பீஸ் உருவாக்கப்படும் இடம்தான் திண்டுக்கல் மாவட்டம். இங்கு பல்வேறு பகுதிகளில் சாக்பீஸ் தயாரிப்பு குடிசைத் தொழிலாக  செயல்பட்டு வருகிறது. இந்த சாக்பீசை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் நீருடன் கலந்து அதை அச்சில் வார்த்து வெண்மை நிற கலர் கொண்ட சாக்பீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.




மேலும் நீருடன் கலர் பொடிகள் சேர்த்து பல வண்ணங்களில் வண்ண சாக்பீஸ் தயாரிக்கப்படுது. இங்குள்ள கம்பெனிகளிலிருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேலான சாக்பீஸ் தயாராகி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.  இதனால் சாக்பீஸ் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் வருமானத்துக்கு வழியில்லாம இருக்காங்க, இதனை தயாரிக்கும் தொழிலாளர்கள்.


 



இந்த குடிசை தொழில் நடத்துபவர்கள் இப்போ வேறு தொழில்களை நோக்கி, பயணம் செய்யும் நிலைக்கு வந்துட்டாங்கனு கூட சொல்லலாம். தற்போது ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வு கொடுத்து இருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் கூட, கல்வி நிறுவனங்கள் திறக்காமல் தங்கள் தொழில் மீண்டும் உயிர்பெறாது என்கிறார்கள்.