டிராவல்ஸ் நிறுவனத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் - ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி வனிதா பேட்டி.

 

மதுரை போடிலைன் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி., வனிதா நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.  இதனையடுத்து விபத்துக்குள்ளான ரயிலில் உள்ளே சென்று விபத்து நடந்து பெட்டியை பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தார்.

 





 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா...,”விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகளை அனுப்பிவைத்த டிராவல்ஸ் நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளோம். வட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து ரயில்களையும் சோதனை செய்கிறோம். ஆனால் இது போன்று இவ்வளவு எரிபொருட்களுடன் ரயிலில் பயணித்ததை இப்போது தான் பார்க்கிறோம்.




 

மதுரை ரயில்நிலையத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தப்படவில்லை. மத்திய ரயில்வே காவல்துறையினர் வருகை தந்து விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளனர். முதற்கட்டமாக 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது.8 பேரின் உடலை உடற்கூராய்வு செய்யப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம். உயிரிழந்தவர்களின் உடலை விமானம் மூலமாக சொந்த ஊருக்கு எடுத்துசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் இருந்து மீட்கப்பட்டவர்களை சொந்த ஊருக்கு ரயில் மூலமாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். 

 




 


 

மேலும் இந்த விபத்து குறித்து பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) மதுரையில் பொது விசாரணை நடத்த இருக்கிறார். இந்த விசாரணை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக முதல் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு துவங்கி நடைபெறும். இந்த விசாரணையில் விபத்து பற்றி அறிந்த தெரிந்த பொது மக்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொது விசாரணையில் ஆணையரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தென்சரகம், ரயில் சன்ரக்ஷா பவன், (இரண்டாவது மாடி) பெங்களூரு - 560023 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.