மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 


லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது பயணிகள் சிலர் ரயிலில் சமையல் செய்யும் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது, இந்த சிலிண்டரானது வெடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், இந்த ரயில் விபத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர்..? விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து மதுரை கலெக்டர் சங்கீதா ஏபிபி நாடுவிற்கு தொலைபேசி மூலம் பிரத்யேக விளக்கம் அளித்தார். அவை பின்வருமாறு.. 


கேள்வி : மதுரை ரயில் விபத்து எப்படி நடந்தது..? இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர்..? விபத்துக்கான காரணம் என்ன..? 


மதுரை கலெக்டர் பதில்: பயணிகள் இராமேஸ்வரம் செல்வதற்காக லக்னோவில் இருந்து முன்பதிவு செய்து வந்துள்ளனர். அதில், தனியார் டிராவல் ஏஜென்சி மூலம் உத்தரபிரதேசத்தில் உள்ள 7 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் புக் செய்து பயணம் செய்துள்ளனர். 


அவர்கள், நேற்று கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கி இன்று அதிகாலை மதுரைக்கு வந்தபோது, காபி குடிப்பதற்காக தாங்கள் கொண்டு வந்திருந்த சிலிண்டரை ஆன் செய்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


கேள்வி: இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்..? 


பதில்: இதுவரை 8 பேரின் உடலை மீட்டுள்ளோம். மேலும், சிலரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 


கேள்வி: பயணிகள் எடுத்து வந்தது மினி சிலிண்டரா..? வீட்டு உபயோக சிலிண்டரா..? இது சட்டவிரோதம் இல்லையா..?


பதில்: இது சட்டவிரோதம்தான்.. ரயிலில் இது என்றைக்கும் அனுமதிக்கப்படாது. 


கேள்வி: எத்தனை பேர் காயம் ஏற்பட்டுள்ளது..? மேலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? 


பதில்: உயிர் பிழைத்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்து உணவு கொடுத்து வருகிறோம். அவர்களிடம் இனிமேல்தான் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு, பயணிகளின் சொந்த ஊருக்கு அனுப்ப திட்டமிடப்படும்.


விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றபோது நேரில் ஆய்வுசெய்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, அதன்பிறகு தீ விபத்தில் காயம் அடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அருகில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தனர்.