குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று சுவர் இடிந்து  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வெயிலுக்கு பின் மழை


கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஓரிரு தினங்களாக தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் ஓரிரு தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் இன்றும் மழை பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


அடுத்த மழை அறிவிப்பு


குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பரவலாக பெய்யும் என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.




மழையில் வீடு இடிந்தது



மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் (44) என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மழை காரணமாக வீட்டின் மேலே இருந்த கான்கிரிட் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

 

வீடு இடிந்ததில் உயிரிழப்பு

 

இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது சுவர் விழுந்தது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் வீட்டில் உள்ளவர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு அந்த காவல்துறையினர் பாலசுப்ரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று சுவர் இடிந்து  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்