கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஓரிரு தினங்களாக தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் ஓரிரு தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் இன்றும் மழை பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


அடுத்த 3 மணி நேரம்:


குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பரவலாக பெய்யும் என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.






வழக்கமாக கோடை காலம் என்றாலே வெயில் தமிழ்நாட்டில் அதிகளவு இருக்கும். இந்த முறை கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்தி வந்தது. அக்னி நட்சத்திரம் பிறந்ததும் அதிகளவு வெயில் பல இடங்களில் காணப்பட்டது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.


தொடரும் மழை:


இந்த நிலையில், மக்களை குளிர்விக்கும் விதமாக சமீப நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் வெயிலின் அவதியில் இருந்து நிம்மதி அடைந்தனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழை நேற்று வெளுத்து வாங்கியது. பட்டுக்கோட்டையில் 16 செ.மீட்டர் மழையும், அதிராமபட்டிணத்தில் 10 செ.மீட்டர் மழையும் பெய்தது.


தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும், இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மாநிலத்தின் தலைநகரமான சென்னையைப் பொறுத்தவரையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இன்று சென்னையில் காலை முதல் வெயில் அடித்து வருகிறது.  சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா? - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!


மேலும் படிக்க: சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!