பைக்கில் சென்ற இளம்பெண்ணை காரின் ஜன்னலில் அமர்ந்தபடி சர்ட் இன்றி பயணம் செய்த இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். உத்தரகாண்டில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்ட் இன்றி கார் ஜன்னலில் பயணம்:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீடு, அலுவலகங்கள் தொடங்கி பொது இடங்கள் வரை, பெண்களுக்கு எதிரான பல வகையான குற்றச்செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, உத்தரகாண்டில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஹரித்வார் நெடுஞ்சாலை வழியாக உத்தரகாண்டுக்கு பைக்கில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் காரின் ஜன்னலில் அமர்ந்தபடி சர்ட் இன்றி பயணம் செய்த 3 இளைஞர்கள் தகாக செய்கைகளை செய்து காட்டியுள்ளனர். அவர்களின் செயலை வீடியோவாக எடுத்த பாதிக்கப்பட்ட பெண், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், காவல்துறை அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

தகாத செய்கை செய்த இளைஞர்கள்:

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "நான் பைக்கில் செல்வதைக் கண்டதும், அவர்கள் (இளைஞர்கள்) என்னை நோக்கி ஆபாசமான சைகைகளைச் செய்யத் தொடங்கினர். நான் அவர்களின் செயல்களை வீடியோ எடுத்துள்ளேன்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தை வீடியோ எடுப்பதன் மூலம் என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு தைரியம் அளிக்க விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவங்களை புறக்கணிக்கக்கூடாது என்று நான் கூற விரும்புகிறேன். இதுபோன்றவர்களின் செயல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

கிழித்து தொங்கவிட்ட இளம்பெண்:

உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லியைச் சேர்ந்த மக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உத்தரகண்டிற்கு அடிக்கடி வருகிறார்கள். அவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபட விரும்பினால் எங்கள் உத்தரகண்டிற்கு வராதீர்கள். உங்கள் வரம்புகளுக்குள் இருங்கள்..உங்கள் நகரத்திலோ, வீட்டிலோ அல்லது உங்கள் பெற்றோரின் முன்னிலையிலோ இதுபோன்ற செயல்களைச் செய்யுங்கள்" என்றார்.

அந்தப் பெண் பகிர்ந்து காணொளியில், சட்டை அணியாத இரண்டு ஆண்கள் காரின் ஜன்னலில் இருந்து தொங்கியபடி, அவரை நோக்கி முத்தமிடுவது போல் செய்கை செய்வதை காணலாம். அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி ஆபாசமான கருத்துக்களை கூறுவதை கேட்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நான்கு சக்கர வாகனத்திலிருந்து தொங்கிக் கொண்டு நடனமாட முயற்சிப்பதையும் காணலாம்.