நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம்,  விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி உள்ளது. மேலும் களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயமும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகளும் உள்ளன. இவை அவ்வபோது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி உள்ளது. அதே போல கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.. வனவிலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரக்கோரியும் நெல்லை மாவட்ட விவசாயிகளும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது வேம்பையாபுரம். இங்கு விவசாய தொழில் செய்து வருகிறார் சங்கர். மேலும் விவசாய தேவைகளுக்காக தனது வீட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். குறிப்பாக வேம்பையாபுரம் கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ளது. வழக்கம் போல நேற்றிரவு ஆடு, மாடுகளை கட்டிப்போட்டு விட்டு சங்கர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் அங்கு புகுந்த சிறுத்தை ஒன்றி கட்டி போடப்பட்டிருந்த ஆடு ஒன்றை வேட்டையாடி மலைப்பகுதிக்குள் தூக்கிச் சென்றுள்ளது.  தொடர்ந்து இன்று அதிகாலையில் எழுந்து பார்த்த போது ஆடு காணாமல் போனதை அறிந்த அவர் மாயமான ஆட்டை தேடி பார்த்துள்ளார். அப்போது வழி நெடுகிலும் கிடந்த ரத்தத்தினை பார்த்து அதனைப் பின்தொடர்ந்து சென்று தேடி பார்த்த போது ஆட்டின் உடல் பாதியாக சிறுத்தை குதறிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 




தொடர்ந்து இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு  நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆட்டை கடித்து குதறியது சிறுத்தை தானா? என தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே சங்கர் வீட்டில் இதே போல் கடந்தாண்டு தீபாவளி அன்று ஒரு ஆட்டை சிறுத்தை வேட்டையாடி சென்றது. தொடர்ச்சியாக இது போன்று பல இடங்களில் மலை அடிவாரப் பகுதியில் ஊருக்குள் புகும் சிறுத்தை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..