தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் கீழடியைப் போல் சமவெளி நாகரீகம் எங்கு, எங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அகழாய்வு நடத்த முயற்சி எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


 

அதே போல் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கடித்தில், "ஒன்றிய அரசின் தொல்லியல் துறை நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது. அதைப்போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும். அகழாய்வு குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்று துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும்.


அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படி கீழடி தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இந்நிலையில் கீழடி 7-ம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன.



மதுரை மாவட்டத்திற்கு அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது.



தற்போது சுடுமண் முத்திரை, முன்னோர்கள் நெசவுக்கு பயன்படுத்திய தக்களி என்னும் ‌நூல் கோர்க்கும் கருவி, பெண்கள் காதில் அணியும் அழகிய வேலைப்பாடுகள் உடைய சுடுமண் காதணிகள், கூர்மையான பென்சில்போல் வடிவம் கொண்ட எலும்பு புள்ளி ,சுடுமண்  விளையாட்டு பொம்மை , பாசிகள் , சுடுமண் ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆறு அடுக்கு கொண்ட ஒரு உறை கிணறு கிடைத்துள்ளன.




 

மேலும் கீழடி தொடர்பான வீடியோக்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - உறை கிணறுகள்..பானைகள்..வியக்கவைக்கும் கீழடி!

 

இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவற்றின் பயன்பாடுகள், காலம் குறித்து ஆராய்ச்சிக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். மேலும் கீழடி, அகரம், மணலூர், மற்றும் கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.