கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 136 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை மேலும் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. முல்லைப்பெரியாற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 139 கன அடியாகவும், நீர்மட்டம் 133.80 அடியாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 875 கனஅடியாக உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடிதண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் 5 ஆயிரத்து 929 மில்லியன் கன அடி நீர் இருப்பானது இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 10.4 மி.மீ, தேக்கடியில் 10 மி.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் வரத்து அதிகரிப்பாலும் 136 அடிக்கும் மேல் உயர்ந்து வருவதாலும் தமிழக பொதுப்பணித்துறை சார்பாக முதல் எச்சரிக்கை தகவலை கேரளா இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து திறக்கப்பட்ட நீர் மதுரையை வந்தடைந்தது, தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியுள்ள நிலையில் நேற்று முன்தினம் அணையிலிருந்து நீரானது திறக்கப்பட்டது. அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரக்கூடிய நீர் முழுமையாக 1750 கன அடி வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் திறக்கப்பட்ட நீரானது நேற்று மதுரை வைகை ஆற்று பகுதிக்கு வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து கரையோர பகுதி மக்கள் குளிக்கவோ, கரையோரங்களுக்கு செல்லவோ , கால்நடைகளை அழைத்துசெல்லவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
மேலும் வைகை ஆற்று நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் அருகே ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திறக்கப்படும் நீரானது தங்குதடையின்றி செல்லும் வகையில் ஆகாயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரானது மதுரை வந்தடைந்தது குறிப்பிடதக்கது.
மதுரையின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரியுமா - TN Corona Update: மதுரையில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு; சிவகங்கையில் 27 பேர் பாதிப்பு!