விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த புதன்கிழமை வாகன சோதனையின் போது நவநீத கிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் குட்கா, பான்மசால பொருட்களை எடுத்துச்சென்றது தெரியவந்தது. அப்போது தொடர்ந்து விசாரணை நடத்தியபோது திருபாற்கடல் குளம் பகுதியில் உள்ள வாடகை இடத்தில் செயல்பட்ட கிட்டங்கியில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது. 158 மூடை குட்கா, 234 கிலோ புகையிலை பொருட்கள், 7 லட்சத்தி 48 ஆயிரம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.



அதே போல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் ரவிச்சந்திரன் வீட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்தபோது, ஒரு டன் அளவுள்ள சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான பான்பராக், பான்மசாலா, புகையிலை போன்ற குட்கா பொருட்களும், தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம்  குட்கா பொருட்கள் பதுக்கல்  குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில் தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவரது உத்தரவின் பேரில் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால்  மதுரை மாநகர் பகுதிகளில் முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.  மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6-வது தெருவில்,  தனியாருக்கு சொந்தமான கிட்டங்கியில்  சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. குடோனுக்கு சென்ற காவல்துறையினர் பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது, சுமார் 1200க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் சுமார் 3 டன் அளவு மதிப்புள்ள இந்திய புகையிலை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத போலியான சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது.



அதனைத் தொடர்ந்து போலி சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் குடோன் கண்காணிப்பாளர் பிரபுவை கைது செய்து விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடோனின் உரிமையாளர் பன்னீர் செல்வம் சட்டவிரோதமாக தென் மாவட்டங்களுக்கு சாக்லேட் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது போன்று புகையிலை மற்றும் போலி சிகரெட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



தொடர்ந்து தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். மேலும் குடோனை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றிய விளக்குத்தூண் உதவி ஆணையர் சூரகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டி, மற்றும் தனிப்படை காவல்துறையினர் மணிமாறன், சரவணன், பிரபு ஆகியோரை மாநகர காவல்துறை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வெகுவாக பாராட்டினார்.