மதுரையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மாலை தொடங்கி 7ஆம் தேதி மாலை 5 மணிவரை பதிவு செய்துகொள்ளலாம் - மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி:


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளான மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்  வருகிற 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும் , உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான முகூர்த்த கால் நடப்பட்டு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

 

இதனுடைய போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்களும் காளைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள காளை  உரிமையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பர்.

 


கலெக்டர் அறிவிப்பு


இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காலை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இணையதள பக்கமான madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை நாளை மாலை 5 முதல் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில்  கலந்துகொள்ளும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளில் எதவாது ஒரு போட்டியில்  மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 


கூடுதல் நேரம் வேண்டும்:


மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு அறிவிப்பு வெளியாகிய நிலையில் காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே காளைகளுக்கு உடற்தகுதி மருத்துவச் சான்றுகளும் தமிழக முழுவதிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் வழங்கப்பட்டுவருகிறது.

 

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் முன்பதிவுக்கு 24 மணி நேரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் இணைய சேவை கிடைக்காத பகுதியில் உள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி  வீரர்கள் சிரமத்திற்கு ஆளாக கூடும் நிலை ஏற்படும் எனவும் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், மதுரையைச் சேர்ந்த உள்ளூர் காளைகளுக்கு அதிக அளவிற்கான வாய்ப்புகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.