மக்கள் பிரச்னைகளுக்காக தெருவில் இறங்கி போராடுவோம் எனவும் திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகம் பேசியுள்ளார். 


சிபிஎம் 24வது மாநாடு:


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், 24வது மாநில மாநாடானது, இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் பெ.சண்முகம், புதிய மாநிலச் செயலாளராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பாலகிருஷ்ணன், தொடர்ந்து 2 முறை 6 ஆண்டுகாலம் சிபிஎம் மாநில செயலாளரா பதவி வகித்து வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி விதியின்படி அதிகபட்ச வயது 72 வயது என இருக்க வேண்டும் என கூறப்படும் நிலையில், பாலகிருஷ்ணனுக்கு 71 வயதை கடந்தது.




சிபிஎம் புதிய மாநில செயலாளர்:


இந்நிலையில், பாலகிருஷ்ணன் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம், தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினராக நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பெ.சண்முகம், மலைவாழ் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மாணவராக இருந்தபோதே, இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பயணித்தவர். மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தியவர். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தினார்.


மேலும், இம்மாநாட்டில் 81 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


”தெருவில் இறங்கி போராடுவோம்”


புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகம் பேசியதாவது, “ தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறை ஒழியும் வரை தொடர்ந்து போராடுவோம். மதவெறி சக்திகளுக்கு எதிராக , மதச்சார்பற்ற கட்சிகளுடன் போராட்டத்தை சிபிஎம் முன்னெடுக்கும். மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து சிபிஎம் பயணிக்கும். 


மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பு பறிக்கும் நடவடிக்கைகளில்தான் மத்திய அரசு செயலப்டுகிறது. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, சிபிஎம் போராடும்; ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்; மக்கள் பிரச்னைகளுக்காக தெருவில் இறங்கி போராடுவோம். 


திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை; அப்படி கூறுவது பொறுத்தமற்றது எனவும் , புதிதாக  சிபிஎம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகம் தெரிவித்தார். 


Also Read: Nimisha Priya:பிளட் மணி என்றால் என்ன? ”ஏமனில் மரணதண்டனையில் சிக்கிய நிமிசாவை காபாற்றுங்கள்”