சட்ட விரோத நடவடிக்கையால் கருவுற்ற 15 வயது சிறுமியின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது 15 வயது மகள் சட்டவிரோத நடவடிக்கையால் கர்ப்பமாக உள்ளார். குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு உடல்நிலை இல்லை. தற்போது அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள், கருவை கலைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். ஆகவே, எனது மகளின் வயது, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

 


 

மகளின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி


 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் மகள் குழந்தை பெற்றெடுப்பது மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கும். மேலும் அந்த சிறுமி, குழந்தையை வளர்த்தெடுப்பது சிரமமான காரியம். எனவே மருத்துவர்களின் கருத்துகளின் அடிப்படையில் உடனடியாக மனுதாரர் மகளின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.