டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார். 


சிறைக்கு செல்லும் முன் பேட்டி:


அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது, ”என் மீதான குற்றங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 21 நாட்களில் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்கவில்லை. எனக்கு, தேர்தல் பரப்புரைக்காக 21 நாட்கள் வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை, தேசம்தான் முக்கியம்” என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 




 


கருத்துக் கணிப்புகள் குறித்து தெரிவிக்கையில், எல்லா கருத்துக் கணிப்புகளும் போலியானவை என்று என்னால் சொல்ல முடியும். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என்று யாரோ அறிவுறுத்தியிருக்க வேண்டும் என கருத்து கணிப்புகள் குறித்து கெஜ்ரிவால் தெரிவித்தார்.


 


சிறைக்கும் முன் மரியாதை மற்றும் வழிபாடு


பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியே வந்து, மக்களவை தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டார். 


இந்நிலையில், இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில் இன்று திகார் சிறைக்கு புறப்பட்டார் . இதற்கு முன்பு மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.






மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கஹ்லோட் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் பங்கேற்றனர்.

 

இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர்  உள்ளிட்டோர் கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தனர்.






முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு:


டெல்லி உயர்நீதிமன்றத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். பின்னர் கெஜ்ரிவால் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், அரவிந்த கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் தொடர்பாக, கடந்த மே 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்தது.


இதையடுத்து, மே 10ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிlலையில் ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் சிறைக்கு திரும்பினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.