தஞ்சாவூர்: டாட்டா, சியூ, பை..பை என்று மக்களை வாட்டி வதக்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் மக்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.
வெயில் தாக்கத்தால் மக்கள் அவதி
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதம் வெயில் தாக்கம் உச்சத்தை தொட்டது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து மக்களை அவதிக்குள்ளாக்கியது.
106 டிகிரி வரை கொளுத்திய அக்னி நட்சத்திரம்
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய சில நாட்களில் வானிலை மாறுபாட்டால் வெப்ப அலை வீசியது. வெயில் சுட்டெரித்தால் மக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாடியதை நிறுத்தினர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் இளநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானம் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சாலையோரங்களில் தற்காலிக கடைகளில் நுங்கு மற்றும் இளநீர், வெள்ளரி விற்பனை அதிக அளவில் நடந்தது.
வெள்ளரி விற்பனை அமோகம்
தஞ்சை மாவட்டத்தில் காசாவளநாடுபுதூர், திருவையாறு, கண்டியூர், அரசூர், திருச்சோற்றுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 500 ஏக்கர் வரை வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வெள்ளரி 3 மாத பயிர் ஆகும். வெள்ளரி விதை போடப்பட்டு 50 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். தற்போது இந்த வெள்ளரி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோடை மழை கொடுத்த அட்டகாச என்ட்ரி
இவ்வாறு அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய்களை வியாபாரிகள், நேரடியாக வந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். மேலும் கரும்பு ஜூஸ், பழச்சாறுகள் என்று அக்னி நட்சத்திர காலத்தில் விற்பனை கல்லா கட்டியது. தொடர்ந்து கோடை மழை அட்டகாச என்ட்ரி கொடுக்க அக்னி நட்சத்திரம் ஆட்டம் கண்டது. வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியதால் மூன்று மாதங்களாக தவித்து வந்த மக்கள் ஆசுவாசடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் பரவலாக சில நாட்கள் மழை பெய்ய அக்னி நட்சத்திரம் என்பதையே மக்கள் மறந்தனர்.
இன்றுடன் நிறைவடைந்த அக்னி நட்சத்திரம்
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வெயில் அதிகம் இருந்தாலும் முன்பு போல் இல்லாத நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று 28ம் தேதியுடன் முடிவடைந்ததால் மக்கள் வெகு மகிழ்ச்சியில் உள்ளனர்.