கள்ளசாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு - புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

 

கள்ளக்குறிச்சியில் சோகம் 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 52க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், இந்த கள்ளச்சாராய கும்பலுக்கும் தி.மு.க., பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கை அரசியல் களத்தில் அனலை கிளப்பியிருக்கிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கள்ளசாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதை தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்....,”மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் கண்டறிந்தால்  கீழ்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் எனவும்,  புகாரில் குறிப்பிடப்படும்  தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கூறும் நபர் குறித்து ரகசியம் காக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  சட்டவிரோத சாராயம் காய்ச்சுவது தொடர்பான ஏதேனும் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்.10581 காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்.100  மாநகர காவல் Whatsapp எண்.8300021100 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.