கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணங்கள் நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜடாவத், இறப்பிற்கு கள்ளச்சாராயம்தான் காரணம் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்கப் பார்த்தார். ஆனால், அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழ்நாடு அரசே அதனை ஒப்புக்கொண்டு ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்தது.


சாவு வீட்டிற்கு வந்தவர்களும் சாவிற்கு இரையான அவலம்


இந்நிலையில், கள்ளச்சாராயத்தால்தான் மரணங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இறப்புகளை மூடி மறைக்க ஆட்சியர் திட்டமிட்டது ஏன்? அதற்கு காரணம் என்ன? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆட்சியர் முதலில் இது கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த சாவுதான் என ஒப்புக்கொண்டிருந்தால், இறந்தவர் வீட்டிற்கு வந்தவர்களாவது அதே கள்ளச்சாராயத்தை போய் குடிக்காமல் இருந்திருப்பார்கள். ஆனால், ஆட்சியரின் பேட்டியால் சாவு வீட்டிற்கு வந்தவர்களும் சாவிற்கு இரையாகியுள்ளனர் என புகார் எழுந்துள்ளது


ஆட்சியர் பொய் சொன்னது ஏன் ? பொய் சொல்லச் சொன்னது யார் ?


இந்நிலையில், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆட்சியர் இப்படி பட்டவர்தனமாக பொய் சொல்ல என்ன காரணம்? இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. தொடக்கத்திலேயே இது கள்ளச்சாராய சாவுதான் என்று தெரிந்த ஆட்சியர், அடுத்த நாள் சட்டப்பேரவை கூடவுள்ளதால் மேலிடத்து உத்தரவுபடி இதனை மூடி மறைக்க முயற்சித்துள்ளார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை


இது தொடர்பாக பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளை காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக கருதமுடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவுடன், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர், காவல்துறை  உயரதிகாரிகள், ஆளுங்கட்சியினர் ஆதரவும் கள்ளச்சாராய வணிகர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த அளவுக்கு வலிமையான பின்னணி கொண்டவர்களின் துணையுடன் நடந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் தொடங்கி, நேர்மையான திசையில் பயணிக்க வேண்டும். ஆனால், முதல் தகவல் அறிக்கையே நீதியை படுகொலை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளர்.


சுடுகாட்டில் கள்ளச்சாராயம் என அப்பட்டமான பொய்

மேலும், கள்ளச்சாராய சாவுகளின் களமாக இருந்த கருணாபுரம் என்ற பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கருணாபுரத்தில் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய அலுவலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. மது குடிக்க வருபவர்கள் அனைவரும் இந்த அலுவலகங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும்; குடித்து விட்டு இந்த அலுவலகங்கள் வழியாகத் தான் திரும்ப வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றுக்கு நன்கு தெரிந்தே தான் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இது குறித்து  தான் முதலில் விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்தையும் மறைத்து விட்டு, கருணாபுரம் சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக அப்பட்டமான பொய்யுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது விசாரணையின் அடிப்படையையே தகர்த்து விடும்.


பொய் கூறிய மாவட்ட ஆட்சியர் – கொந்தளிக்கும் இராமதாசு

கள்ளச்சாராய சாவுகள் குறித்த செய்திகள் முதன் முதலில் வெளியான போது, உயிரிழப்புகளுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் தொடர்பே இல்லை என்றும், வயிற்றுப்போக்கால் தான் அவர்கள் இறந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறினார். உயிரிழந்த எவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பொய்களை அடுக்கினார். உயிரிழப்புகள் அதிகரித்த பிறகு தான் அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டார்.

கள்ளச்சாராய சாவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறியது ஏன்? அவ்வாறு கூற  அவரை கட்டாயப்படுத்தியது யார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். அதற்காக ஜடாவத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்; அவரை இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்க வேண்டும். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, அங்கேயே தங்கியிருக்க ஆணையிட்ட அரசு, ஆட்சியர் ஜடாவத்தை மட்டும் பணியிட மாற்றம் செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது. கள்ளச்சாராய சாவு விசாரணையில் இந்த முதல் கோணல் முற்றும் கோணலாகவே முடியும் என்று இராமதாஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்


திமுக எம்.எல்.ஏவிற்கு தொடர்பா ? இராமதாஸ் எழுப்பும் கேள்வி


அதே வேளையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மீது செலுத்திய ஆதிக்கம் குறித்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மாவட்ட ஆட்சியராக எவர் வந்தாலும், அதிகாலையில்  ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவருக்கு வணக்கம் வைத்துவிட்டு பணியை தொடங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. காவல்துறை உள்ளிட்ட எந்த துறை அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு வணக்கம் செலுத்தத் தவறினால் அவர் இடமாற்றம் செய்யப்படுவது கட்டாயமாம். அவரது ஆதரவு சாராய வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் பலரும் பந்தாடப்பட்டுள்ளனர். 


அதிகாரம் படைத்தவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் எப்படி விசாரிப்பார்கள் ?


மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு மூல காரணமானவர்கள் என்று பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப் இந்த இருவரும், கள்ளச்சாராய சாவுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுடனும், உள்துறை செயலாளர் உள்ளிட்ட  அதிகாரிகளுடனும் இணைந்து கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது துணை கண்காணிப்பாளர் நிலையிலுள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் அவர்களை எவ்வாறு விசாரிக்க முடியும்.  தமிழக காவல்துறை அதிகாரிகளால், அதிகாரம் பெற்ற இவர்களின் அருகில் கூட நெருங்க முடியாது என குறிப்பிட்டுள்ள மருத்துவர் இராமதாசு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில்  இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.