சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்தரவுக்கிணங்க அவைக்காவலர்கள் அவர்களை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியேற்றினர். 


சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். 


கேள்வி நேரம் தொடங்கியபோது அதிமுக, பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கேள்வி நேரம் வேண்டாம் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, நேரமில்லா நேரத்தில் விவாதிக்க நேரம் தரப்படும் என தெரிவித்தார். 


ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இவ்வாறு சொல்வதை கேட்காமல் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர்கள் கேட்காததால் சபாநாயகர் அமளியில் ஈடுபடும் அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். 


அதன்படி சபாநாயகர் உத்தரவின்படி அவைக்காவலர்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள் உதயக்குமார் உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியேற்றினர். 


இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் கொடுக்கப்படும் என தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை. வேறு வழியில்லமல் வெளியேற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என சபாநாயகர் விளக்கம் அளித்தார். 


மேலும் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அனைத்து கட்சிகளும் விவாதிக்கலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். ஆனால் அது விதியின்படி நடக்க வேண்டும். விதி என்பது முதலமைச்சராக இருந்த இபிஎஸ்க்கு நன்றாகவே தெரியும். சட்ட விதிகளை மீறி அதிமுகவினர் செயல்பட்டனர். அதனால்தான் வெளியேற்றப்பட்டனர் என சபாநாயகர் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் “கேள்வி நேரம் என்பது முக்கியம். கேள்வி நேரத்தின்போது வேறு எந்த விவாதத்தையும் எழுப்பக்கூடாது என்பது விதி. விதியை மீறி செயல்பட்டதால் அவைத்தலைவர் வெளியேற்ற உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார்.