மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரிட்டாபட்டி பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் விரிவாக்கம், குடிநீர் திட்டப்பணி மேம்பாடு, கலையரங்கம் மேம்பாடு, மயானம் மேம்பாடு என 17 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் மூர்த்தி உரையாற்றினார்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி நாயக்கர்பட்டி, அ. வல்லாளபட்டி உள்ளடக்கிய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறு ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவிப்பு செய்தது. முழுமையாக மேலூர் பகுதியில் ரத்து செய்யக்கோரி மேலூர் அருகே நரசிங்கப்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இது குறித்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பாக தமிழக முதல்வரும், மத்திய அரசு சார்பாக அமைச்சர் கிஷன் ரெட்டியும் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி பகுதிக்கு வருகை தந்தனர். இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டியில் திட்டங்கள் நிறைவேற்றுவதாக நம்பிக்கை தெரிவித்த சூழலில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.6.20 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவுள்ளது.
அமைச்சர் மூர்த்தி தகவல்
”தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுத்ததோடு சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றினார்கள். அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையின் மூலம் ஒன்றிய அரசை வலியுறுத்தி இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாமல் தடுத்துள்ளார்கள். மேலும், அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் திட்டம்
அதன்படி, அரிட்டாப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் விரிவாக்கம், குடிநீர் திட்டப்பணி மேம்பாடு, கலையரங்கம் மேம்பாடு, மயானம் மேம்பாடு என 17 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு போன்ற பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றிகின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் அரசு நிர்வாகத்தை அணுகலாம்” என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - எய்ம்ஸ் கட்டடப் பணி முடிவதற்கு முன் இதையெல்லாம் செஞ்சு முடிக்கணும்.. கடிதத்தில் இருப்பது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருச்சுழி அருகே 300 ஆண்டுகள் பழமையான வாமனக்கல் கண்டுபிடிப்பு.. தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !