எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்னதாக கப்பலூர், செக்கானூரணி ரயில் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி உதயகுமார், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி

மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தென்னிந்தியாவில், திருமங்கலம் உச்சபட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த கப்பலூர் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையும், 19,500 குடியிருப்பு கொண்ட துணைக்கோள் நகரமும் அமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய சிட்கோ தொழில்பேட்டையும் திருமங்கலம் கப்பலூரில் செயல்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள்.
 

கப்பலூர் ரயில் நிலையம், செக்கானூரணி ரயில் நிலையம்

ஆகவே பொதுமக்களின் வசதிக்காகவும், மேற்கண்ட வளர்ச்சி திட்டங்களின் அடிப்படையில் கப்பலூர் ரயில் நிலையத்தை மீண்டும் அமைத்திடவும், இதே போல் மதுரை- தேனி மார்க்கத்தில் அகல ரயில் பாதை அமைத்திட்டபோது மூடப்பட்ட செக்கானூரணியில் நிலையத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து திருமங்கலம் அதனை சுற்றியுள்ள மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல வசதியாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கும் கப்பலூர் ரயில் நிலையம், செக்கானூரணி ரயில் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம்

  
ஆகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்னதாக கப்பலூர் ரயில் நிலையம் செக்கானூரணி ரயில் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?