மதுரை விமான நிலையத்தில் முதல்வரை சந்திக்க முயன்ற பா.ஜ.க., நிர்வாகி கஞ்சா பொட்டலத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கோடை வெயில்

 

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெயிலை தாங்க முடியாமல் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வதற்காக இன்று தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது முதல்வரை சந்தித்து போதைப் பொருட்களுக்கு எதிராக  மனு கொடுக்க வேண்டும் என முயற்சித்த பா.ஜ.க., நிர்வாகி கஞ்சா பொட்டலத்துடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மதுரையில் பாதுகாப்பு

 

மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் வருகையொட்டி மதுரை மாநகர் காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் முதல்வரை நேரில் சந்தித்து கஞ்சா பொட்டலங்களுடன் மனு கொடுப்பதற்காக வந்த பா.ஜ.க., நிர்வாகியால்  பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தடுக்க வேண்டிய மனு அளிப்பதற்காக பா.ஜ.க., ஓ.பி.சி அணி செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த பா.ஜ.க., நிர்வாகியை போலீசார் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து அவரை கைது செய்து விசாரணைக்காக வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

அவரிடம் இருந்த மனுவில்..,”தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள் ஏழைக் கூலி தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர் வரை போதைப் வழக்திற்க்கு அடிமையாகி வடுகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி நடவடிக்கை அடுத்து போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். என்று தங்களை தாழ்மையுடன் கேட்க்கொள்கிறேன்” என அந்த மனுவில் பாஜக நிர்வாகி தெரிவித்திருந்தார்.

 

மேலும் ”இத்துடன் தமிழகத்தில் எளிதாக கிடைக்கும் கஞ்சா பொட்டலத்தை இணைத்துள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை பிரித்து பார்த்த போலீசார் அதில் கஞ்சா பொட்டலமும் இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர். பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் முதல்வர் அருகே பாஜக நிர்வாகியால் செல்ல முடியவில்லை. ஒரேவேளை பாதுகாப்பு குறைபாடு இருந்திருந்தால், முதல்வரிடமே கஞ்சா பொட்டலத்தை அந்த நிர்வாகி கொடுத்திருப்பார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

அதிமுக ஆட்சியில் போதை பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில், தங்கு தடையின்றி அவை புழக்கத்தில் இருந்ததாக கூறி குட்கா பாக்கெட்டுகளை சட்டப்பேரவைக்குள்ளே எடுத்துச் சென்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டியது குறிப்பிடத்தக்கது.