தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றது. உலகப்புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமாவும் விளங்குகிறது. இங்கு உள்ள முருகன் சிலை ஐம்பொன் சிலையாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மட்டும் வெளிநாட்டினரும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக உண்டியல் காணிக்கை வசூல் செய்யும் முக்கிய இடமாகவும் உள்ளது.
இந்த நிலையில் பழனியில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. பழனிமலைக் கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பரின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். கணியர் ஞானசேகரன் உதவியோடு செப்பேட்டை ஆராய்ந்த நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்த செப்பேடு சிவகங்கைச் சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையைப் பற்றிக் கூறுகிறது.
செப்பேட்டை சிவகெங்கை அரசர், பழனியில் வசிக்கும் காசிப்பண்டாரத்தின் மகன் பழனிமலைப் பண்டாரத்துக்கு வழங்கி உள்ளார். பழனிமலை முருகனுக்கு திருக்காலச் சந்தி காலபூஜையில், திருவிளக்கு, திருமாலை, அபிசேகம், நைவேத்தியம் ஆகியவை தடைபடாமல் நடப்பதற்காக, தம்முடைய ஆட்சிப்பகுதியில் இருந்த முசுட்டாக்குறிச்சி, பெத்தனேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்னக்குளம் ஆகிய ஆறு ஊர்களை வரிகள் நீக்கி சர்வமானியமாகக் கொடுத்துள்ளார்.கொடை அளிக்கப்பட்ட. கிராமங்களின் நான்கெடைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது.
செப்பேட்டின் முகப்பில் மயில், சூரியசந்திரர்களுக்கிடையே வேல், வலது ஓரத்தில் அரசரின் உருவம் ஆகியவை கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 44 செ.மீ உயரமும் 25 செ.மீ அகலமும் உள்ள இச்செப்பேடு 875 கிராம் எடை உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் முன்பின் பக்கங்களில் 100 வரிகளில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. காலத்தைத் தவறாகக் குறிப்பிடும் இச்செப்பேட்டின் முன் பக்கம் முழுதும் விசையரகுநாத பெரிய உடையாத் தேவரின் 123 பட்டங்கள் புகழ்ச்சியுடன் பொறிக்கப் பட்டுள்ளன.
பின்பக்கம் 65 ஆம் வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் 'ஆறுமுக ஸகாயம்' என்று எழுதப்பட்டுள்ளது. இது ஓர் ஆய்வுக்குரிய விசயமாகும். செப்பேட்டின் இறுதியில் இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணிய பேர்கள் அடையும் புண்ணியத்தையும், கெடுதல் செய்தவர்கள் அடையும் தோசத்தையும் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. இச்செப்பேட்டை தர்மராய பிள்ளையின் மகன் சொக்கு என்பவர் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.