தமிழக முதல்வர் கொடைக்கானல் வருகையைடுத்து பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை, ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் மே 4 ம் தேதி வரை குடும்பத்துடன் கொடைக்கானலில் ஐந்து நாட்கள் ஓய்வெடுக்க வருகை தருவதால் கொடைக்கானல் மற்றும் பழனி சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று பழனியில் இருந்து கொடைக்கானல் மலைக்குச் செல்லும் வாகனங்களுக்கு வழக்கமான சாலை தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக பழனியில் இருந்து அய்யம்பள்ளி சாலை வழியாக பெரும்பாறை சித்தரேவு, தாண்டிக்குடி, வழியாக கொடைக்கானல் செல்லவும் போலீசார் பாதைகளை மாற்றம் செய்துள்ளனர்.
அதேபோல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை சுற்றுலா பயணிகள் செல்ல மதியம் ஒரு மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் செல்பவர்கள் வத்தலகுண்டு சாலை வழியாக மேலே செல்லவும் பழனி சாலை வழியாக கீழே இறங்கவும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து போலீசார் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.