நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி என அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுகவிற்கு மதிமுகவிற்கும் இடையே அனுதினமும் பிரச்னை இருப்பதாக சிலர் கிளப்பிவிட, தீப்பெட்டியில் உராயும் தீக்குச்சிப்போல் தகித்து கிடக்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.



வைகோவுடன் - துரை வைகோ


ஆதங்கமும் கண்ணீரும்


திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று ஆதங்கமாக பேசி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே கண்ணீர் வடித்தார் துரை வைகோ. அன்றிலிருந்து துரை வைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி, திமுக அழுத்தம் கொடுக்கிறது, அவருக்கு திமுக நிர்வாகிகள் யாரும் திருச்சியில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது மாதிரியான செய்திகள் உலா வரத் தொடங்கின. ஒரு கட்டத்தில், துரை வைகோவிற்கும் திமுகவிற்கும் இடையே நெருடல் ஏற்பட்டுள்ளது என்று கூட தகவல்கள் கச்சைக் கட்டி பறந்தன.



அமைச்சர் நேருவுடன் துரை வைகோ


”துரை வைகோவிற்கு எதிராக சதி - கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்”


மதிமுகவிற்கும் பம்பரம் சின்னம் கிடைக்காமல் தீப்பெட்டி சின்னம் கிடைத்த நிலையில், துரை வைகோ வெற்றியே திருச்சியில் கேள்விகுறியாகும் என்பதுபோல் சிலர் கிளப்பிவிட, திமுகவினரே சற்று அதிர்ந்துதான் போயினர். ஆனால், துரை வைகோவின் அணுகுமுறையால் திருச்சியில் அப்படி எந்த பிரச்னையும் எழவில்லை. கே.என்.நேரு அவரை சரியாக நடத்தவில்லை என்று சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பும் தொடர்பும் கட்சியை தாண்டியது என்பது அவர்கள் இருவருமே நன்றாக அறிவர். அதனால்தான், தேர்தல் வேலைகள் திருச்சியில் சுனக்கம் இன்றி நடந்தது.


”தலைமைக்கு போன் மேல் போன் போட்ட தொண்டர்கள் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மதிமுக”


ஆனால், திருச்சி பிரச்னையை தலைநகர் சென்னை வரை சிலர் கடத்தி வந்து மதிமுக தலைமைக்கும் திமுக தலைமைக்கும் இடையே பெரிய பிரச்னை வெடித்துள்ளது, தேர்தலுக்கு பிறகு இரண்டு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் பிளவு ஏற்பட போகிறது என்ற ரேஞ்சுக்கு செய்திகளை கசியவிட்டார்கள். ஒவ்வொருநாளும், சில நாளேடுகள் கூட மதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே இருக்கும் பிரச்னை பூதாகரமாகிவருகிறது என்பது போன்ற செய்திகளை வெளியிட, மதிமுக தொண்டர்களோ இது உண்மையாக இருக்குமோ என நினைத்து தலைமைக்கு போன் மேல் போன் போடத் தொடங்கினர்.


அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திமுகவிற்கும் – மதிமுகவிற்கு இடையே உறவு சுமூகமாகதான் இருக்கிறது என அவர்கள் விளக்கமளித்த பின்னர், இப்படியான வதந்திகளை பரப்புவோர் மீது தொண்டர்களின் கோபம் திரும்பியுள்ளது என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.


”மதிமுகவின் எதிர்காலமான துரை வைகோ”


இனி மதிமுகவின் எதிர்காலம் துரை வைகோதான் என்று ஆகிவிட்ட நிலையில், அவரின் வளர்ச்சியை பிடிக்காதவர்களும், அவரின் செயல்பாடுகளால் கட்சி புது தெம்பை பெற்றுவிடுமோ என்று அஞ்சுபவர்களும் இதுபோன்ற வேலைகளை பார்ப்பதாக மதிமுக தலைமை நினைக்கிறது. இதில் இன்னும் சொல்ல வேண்டுமானால், மதிமுகவில் இருந்து வெளியேறிய சிலரே இதுபோன்ற அவதூறுகளை கட்சியை நோக்கி வீசுவதுதான் மதிமுக தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


திமுகவோடு மதிமுகவை வைகோ இணைக்கப் போகிறார் என்ற புரளி சில மாதங்களுக்கு முன்னர் பரப்பப்பட்டது. இப்போது பாஜகவோடு மதிமுக தலைமை நெருக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறது என்ற புதிய வகையில் ஒரு உருட்டை மதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என மதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூறி, அவர்களுக்கு எதிரான கொதி மனநிலையில் இருக்கிறார்கள்.


அதே நேரத்தில், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரிடமும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடனும், நல்ல நட்போடும் புரிதலோடுமே துரை வைகோ பயணித்து வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.