கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் இருந்து பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், நிர்மலா தேவிக்கு தண்டனையை உறுதி செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.  


கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்ட 3 பேர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு  நீதிமன்றம் ஆஜர் படுத்தப்பட்டனர். 


ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில் நிர்மலாதேவி  ஆஜராகாததால்  நீதிமன்றம் தீர்ப்பை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.


இந்நிலையில் பேராசிரியர் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது, சுமார் 5, 300க்கு மேற்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பேராசியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். 


நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்து  தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


வழக்கு விவரம் என்ன..? 


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவராக கூறப்படுகிறது. இந்தநிலையில், நிர்மலா தேவி பல ஆண்டுகளாக தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல் ரீதியாக அவர்களுடன் இணக்கமாக இருக்க வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிர்மலா தேவியால் குறிவைக்கப்பட்ட மாணவிகள் சிலர், நிர்மலாதேவி பேசியதை பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார்செய்தனர். பெற்றொர்கள் கொடுத்த இந்த புகாரை கல்லூரி நிர்வாகம் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய போன் உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் உருவெடுத்தது. 


தொடக்கத்தில்  மறைக்கப்படவிருந்த இந்தச் சம்பவம், அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பு, எஸ்.எஃப்.ஐ., ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தால் நீதிமன்ற வழக்குக்காக மாறியது. நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.