உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து 15 பச்சிளம் குழந்தைகள் பாதிப்பு - ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்த சூழலில் மேலும் 14 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மர்ம காய்ச்சல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி - கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான் பாறை கிராமத்தில் சுமார் 100 -க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் முத்தையா என்பவரது 3 வயது மகனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் இந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சுமார் 14 பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8 பேரும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் கடந்த ஓரிரு நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில். இன்று ஒரே நாளில் 4 பச்சிளம் குழந்தைகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு இறப்பு நிகழ்ந்த பின்னும் மருத்துவ அலுவலர்கள் இக்கிராமத்தை ஆய்வு செய்து முகாம்கள் நடத்தவில்லை என்றும், விரைவில் சிறப்பு முகாம்களை அமைத்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் கோரிக்கை
மேலும் இதுகுறித்து உசிலம்பட்டி சமூக ஆர்வலர் செந்தில் நம்மிடம் கூறுகையில்,”மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கிராமங்கள் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் டெங்கு பாதிப்பு அதிமாக இருந்தது. இதனால் இறப்பு விகிதமும் அதிகமானது. இந்நிலையில், உசிலம்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை முக்கியமாக கருதி போர்கால அடிப்படையில் மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ உதவி செய்யவேண்டும். இப்பகுதியில் போதுமான சத்தான உணவுகள் கிடைக்கவில்லை என்ற சூழலும் இருக்கிறது. எனவே அரசு தனி கவனம் எடுத்து பின் தங்கிய கிராமத்து குழந்தைகளுக்கு ஊட்டசத்து நிறைந்த உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். உசிலம்பட்டியை அடுத்த மொக்கத்தான் பாறை கிராமத்தில் சுமார் 100க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி