திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி என்பவர். இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் இவர், சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்று, மதுபானம் வாங்கியுள்ளார். பின்னர், அதனை திறந்து குடிப்பதற்காக மதுபாட்டிலை குலுக்கியுள்ளார். அப்போது பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உற்று கவனித்து பார்த்தபோது, மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டி தவளை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. பாட்டிலுக்குள் தவளை மிதப்பது குறித்து பாண்டி, சித்தரேவு டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்காமல், இந்த பாட்டிலுக்கு பதிலாக வேறு மதுபாட்டில் தருவதாக கூறி சமரசம் செய்ய முயன்றார். இதை ஏற்றுக்கொள்ளாத பாண்டி, மதுபாட்டிலை விற்பனையாளரிடம் கொடுக்காமல் தனது வீட்டுக்கே கொண்டு சென்று விட்டார்.
இதற்கிடையே மதுபாட்டிலுக்குள் குட்டி தவளை கிடந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனையடுத்து நெல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஏராளமானோர் வந்து மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை பார்த்து சென்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த தகவலை அறிந்த அப்பகுதி குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி : திமுக உட்கட்சி தேர்தல்: தேனி மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்