மதுரை - தேனி புதிய அகல ரயில் பாதை மற்றும் புதிய ரயில் துவக்க விழாவும், மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மதுரை மேற்கு நுழைவாயில் ஆறாவது பிளாட்பாரத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

 


மதுரையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, எம். பூமிநாதன், செல்லூர் கே. ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செல்லூர் கே.ராஜூ பேசுகையில்," பாரத பிரதமர், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் திட்டங்களை கொடுத்துள்ளார். அடுத்த தலைமுறைக்கான திட்டங்களாகவும் இது அமையும். சுமார் 31 ஆயிரத்து ஐநூற்று 30 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தும், அடிக்கல் நாட்டியும் துவக்கி வைத்துள்ளார்.

 



அனைவரின் சார்பாக பாரத பிரதமருக்கு நன்றி. கச்சத்தீவு, நீட் பிரச்னைகளில் திமுகவினர் ஸ்டண்ட் அடிக்கின்றனர். விளம்பரத்திற்காக மட்டும் நீட் பிரச்னைகள் பற்றி பேசுகின்றார் தமிழக முதல்வர்.

 

முதல்வர், பிரதமரிடம் புதிய கோரிக்கைகள் எதுவும் வைக்கவில்லை. நீட் பிரச்னையில் தி.மு.க நாடகமாடுகிறது. பிளஸ்-2 மாணவர்களை தொடர்ந்து தி.மு.க, குழப்பி வருகிறது. திமுக அரசு இந்த ஓராண்டில் அரியர்ஸ்தான் வைத்துள்ளது. பாஸ் செய்யவில்லை. தென் மாவட்டங்களில் பயன்பெறும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு வரவேண்டும் என பிரதமரிடம், முதல்வர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை தென் மாவட்ட மக்கள் மீது பாசம் இல்லை.



தமிழகத்தில் ரவுடிசம் அதிகமானதற்கு காரணம் திமுகவினர்தான். முக்கிய திமுக புள்ளிகளின் பின்னால் ரவுடிகள் உள்ளனர். காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ரவுடிசியத்தை அடக்குவதற்கு திமுகவினர் தடைக்கல்லாக இருக்கின்றனர். அரிசிக் கடத்தல் அதிகமாயுள்ளது. தி.மு.க., புள்ளிகள் அரிசிக்கடத்தலுக்கு உதவியாக இருக்கின்றனர். இதுதான் முதன்மை மாநிலமா? தமிழகத்திற்கு பொழுதுபோக்கே திமுகதான். மதுரைக்கு பொழுது போக்கு விஷயங்களை கொண்டு வரவேண்டும். சுற்றுலாத்துறையை மதுரையை மேம்படுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.