கடந்த 1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கேரளாவில் விளைந்த ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வியாபார தேவைக்காக தமிழகம் கொண்டுவர போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இயங்கி வந்த சேவை கடந்த 2010 ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி வழியாக இயங்கி வந்ததால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 



இதையடுத்து, மத்திய அரசு இந்த அகலப்படுத்தும் பணிக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2 ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மற்றும் தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை இன்று பிரதமர்  நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டங்களை துவக்கி வைத்தார்.






இந்த நிகழ்ச்சி மதுரை மேற்கு நுழைவாயில் ஆறாவது பிளாட்பாரத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மதுரையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, எம். பூமிநாதன், செல்லூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை - தேனி சிறப்பு ரயிலை பாரத பிரதமரோடு இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.





விழாவில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப் பிரியா, முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலை கோட்ட பொறியாளர் நாராயணன், முதுநிலை கோட்ட தொலைதொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், கட்டுமான பிரிவு இணை முதன்மை பொறியாளர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.