திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலா தலமான கொடைக்கானல் மைய பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.  மேலும் கொடைக்கானலில் நிலவும் குளிர் மற்றும் நீரின் அடர்த்தி காரணமாக ஏரி மற்றும் அருவிகளில் பயணிகள் குளிப்பதற்கு தடை உள்ளது.



 

இந்நிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியின் நடுவே உடல் ஒன்று மிதப்ப‌தாக‌ அப்பகுதி மக்கள் கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கும்,காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர், தகவல் அடிப்படையில் வந்த தீயணைப்பு துறையினர் ஏரியின் நடுவே மிதந்த உடல் அருகில் சென்று பார்த்த போது மிதந்த நபர் உயிரோடு இருக்கவே ஏரியை விட்டு வெளியே செல்லுமாறு தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர், அதனை தொடர்ந்து ஏரியை விட்டு செல்வதற்கு மறுப்பு தெரிவித்த அந்த  நபரை ஒரு குச்சியால் அடிக்கவே அந்த நபர்  ஏரியை விட்டு அழுகையுடன்  வெளியேறினார்,



 

மேலும் அந்த நபரிடம் தீயணைப்பு துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்சியை சேர்ந்த தங்கபாண்டி என்பதும், அவரின் உறவினர்கள் கொடைக்கானல் பள்ளங்கியில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தான் குடித்து இருப்பதாகவும், தான் எந்த தப்பும் செய்ய வில்லை என்றும் ஏரியில் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார். கடலிலேயே சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்  மிதப்பதும் 48 மணிநேரம் ஆனாலும் தண்ணீரில் தூங்குவதாகவும் அழுகையுடன் மீசையை முறுக்கியபடி போதை ஆசாமி தெரிவித்தார்.



 

 

அதனை  தொடர்ந்து  போதை ஆசாமியின் முழு விவரங்களை சேகரித்தும், அறிவுரை வழங்கியும்  போதை ஆசாமியை காவல் துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர், இதனால்  ஏரிச்சாலை பகுதி  சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிகளை தடுக்கும் விதமாக ம‌து அருந்தி இது போன்ற செயல்களில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.