தூத்துக்குடியில் ஒலாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தை திருநங்கை சுப்ரியா பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டரி வாகனத்தை இயக்கும் ஓட்டுநரகாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த திருநங்கை சுப்ரியா, பகுதி நேரமாக கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த ஓட்டுநருக்கான சோதனையில் திருநங்கை சுப்ரியா தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் கனரக வாகனங்களை இயக்கும் உரிமம் பெற்றுள்ள மூன்றாவது திருநங்கை என்ற பெயரை சுப்ரியா பெற்றுள்ளார். இதற்கான ஓட்டுநர் உரிமத்தை தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜிடம் காண்பித்து திருநங்கை சுப்ரியா வாழ்த்து பெற்றார்.
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றது குறித்து திருநங்கை சுப்ரியா தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உதவியால் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சியை கடந்த சில மாதங்களாக பெற்று வந்தேன். தற்போது கனரக வாகனங்களை இயக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் என்போன்ற திருநங்கைகளுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக செயல்பட விரும்புகிறேன்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நான் செய்துவரும் ஓட்டுனர் பணியை நிரந்தர பணியாக மாற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே நான் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரிடமும் வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். அதன் பேரில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தற்போது நான் செய்துவரும் பணியை நிரந்தர பணியாக மாற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், தற்போது தமிழக சுற்றுலாத்துறை இயக்குனருமான சந்தீப் நந்தூரியால், கருணை அடிப்படையில் திருநங்கை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியில் அமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.