பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. இவரது 64-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு பா.ஜ.க. தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு எச்.ராஜா நேற்று பா.ஜ.க. தொண்டர்களுடன் டுவிட்டர் ஸ்பேசஸ் மூலமாக கலந்துரையாடினார்.


அப்போது எச்.ராஜா பேசியதாவது, குறைந்தது 100 கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டே இருக்க வேண்டும். 100க்கு குறைவாக கூட்டங்கள் நடக்கக்கூடாது. அந்த மாதிரி ஒவ்வொரு ஆண்டும் செயல்படுவதற்கு நாம் ஆட்களை தயார் செய்ய வேண்டும். நான் ஒன்றும் மிகவும் வயதானவன் அல்ல. எனக்கு 64 வயதுதான் ஆகிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது முதல் இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனென்றால் மு.க.ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியை விட மிகவும் ஆபத்தானவர் என்பதை மறந்துவிடக்கூடாது என்று பேசியுள்ளார்.





கருணாநிதியை விட மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்ற எச்.ராஜாவின் பேச்சுக்கு தி.மு.க.வினரும், தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், பா.ஜ.க.வினர் குறித்தும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. ஆதரவாளர்கள் சிலர் எச்.ராஜாவின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வினர் தி.மு.க.வை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் இடையேதான் நேரடி மோதல் என்றும் குறிப்பிட்டு பேசி வருகின்றனர். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.




கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே எச்.ராஜா தி.மு.க. தலைவர்கள் மீதும், தி.மு.க. மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.


கருணாநிதி. கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊகடங்கள் குறித்தும் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏபிபி நாடு வலைதள செய்திகளை படிக்க தர்மபுரி: அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்...!