திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுப்படி எடுத்தல் மற்றும் கல்வெட்டு அமைப்பியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

 

ஒரு நாள் கல்வெட்டுப் பயிற்சி

 

 இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் தமிழ்த்துறை முதுகலை மற்றும் இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு ஒரு நாள் கல்வெட்டுப் பயிற்சி பட்டறை  நடத்தப்பட்டது. முதல்நிகழ்வாக அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோயிலுக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டு  சிற்பக் கலைத்திறன், கோயில் கட்டடக் கலை, கல்வெட்டுகள் ஆகியவை விளக்கப்பெற்றன, இதில் கல்வெட்டுகளின் அவசியம் அவற்றின் அமைப்பு, தொடக்கம், முடிவு, கல்வெட்டுகளின் இன்றியமையாமை, கல்வெட்டுகளைப் படிஎடுக்கும் முறை படிக்கும் முறை, கல்வெட்டுகளைப் பாதுகாக்கும்முறை ஆகியவற்றை  அறிந்து கொண்டனர்.

 


 

கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி. 

 

பொதுவாக கல்வெட்டுகளை படியெடுக்கும் முறையை 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் நமது கோயில்களில் எழுதப்பட்டுள்ள வரலாற்றையும் அது தொடர்பான செய்திகளையும் அறிந்து கொள்வதற்காக கல்வெட்டு படி எடுத்துக் கொள்ளும் முறையை உருவாக்கினர். இதன் வழி கல்வெட்டுகளை படி எடுத்து வந்து பொறுமையாக எப்போது வேண்டுமானாலும் வாசிக்கும் முறையை கையாண்டனர். மேலும் கோயில் போன்ற இடங்களில் அமைந்துள்ள கல்வெட்டுகளை படி எடுத்துக் கொண்டு வருவதன் வழி அதன் நகலை எப்போதும் பயன்படுத்த முடிந்ததாக இவை அமைந்தன.

 

எவ்வாறு படி எடுப்பது தெரியுமா?

 

கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை நன்றாக தண்ணீர் வைத்து கழுவி துடைத்த பின்னர் அப்பகுதியில் படியெடுக்க பயன்படுத்தப்படும் வெள்ளை நிறத் தாளை வைத்து இதற்காக பயன்படுத்தப்படும் விலங்கு மயிர்களால் ஆன(பிரஸ்) தேய்ப்பான்களைக் கொண்டு ஓங்கி அடித்து எழுத்துக்களின் இடுக்குகளில் தாள்கள் போய்ச் சேருமாறு செய்து கொண்டு இதற்காக பயன்படுத்தப்படும் ஒருவகை மையினை விலங்குத் தோல்களாளான தேய்ப்பானைக் கொண்டு வெள்ளைத் தாளில் ஒத்தி எடுக்க வேண்டும் இவ்வாறு செய்யும் பொழுது மையானது எழுத்து உள்ள இடுக்குகளில் செல்லாமல் மேற்பகுதியில் மட்டும் ஒட்டி இருக்கும் அப்போது ஒவ்வொரு எழுத்துக்களும் தனித்தனியாக தெரியும் சிறிது நேரத்திற்கு பிறகு காய விட்டு இத்தாளை மெதுவாக எடுத்து விடலாம்  இவையே கல்வெட்டு படி எடுத்தல் என வழங்கப்படுகிறது.

 

பாதுகாத்தலின் அவசியம் 

 

இவ்வாறான கல்வெட்டுகள் குறித்த, படி எடுத்தல் பயிற்சியை ஆதி இரத்தினேஸ்வரர் கோயிலிலும் கல்வெட்டு தொடர்பான கருத்துரையை திருவாடானை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையிலும், சிவகங்கை  தொல் நடைக்குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா  அவர்கள் வழங்கினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு.பழனியப்பன், பேராசிரியர்கள் மணிமேகலை, அழகுராஜா ஆகியோர் உடன் இருந்தனர். இப்பயிற்சி மாணவர்களுக்குக் கல்வெட்டுகளை பாதுகாத்தலின் அவசியத்தை எடுத்துரைத்தது.