நாட்டின் 77ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானப்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். 





இதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவுகளின் மரியாதையை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் சுய உதவிக்குழு , தாட்கோ உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 39 பயனாளிகளுக்கு 1 கோடியே 74 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை, வணிக வரித்துறை, கால்நடைத்துறை, வேளாண்துறை, போக்குவரத்து துறை சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் விருதுகளை வழங்கினார். தொடர்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


 



 

இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அமர்ந்த பகுதியில் நிழலுக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திர போராட்ட தியாகிகள் அமர்ந்த பகுதியில் பந்தல் அமைக்கப்படாத நிலையில் தியாகிகளும் அவர்களது குடும்பத்தினரும் வயதான நிலையிலும் கடும் வெயிலில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் கைகளில் பேப்பர்களை வைத்தும், அட்டைகளை வைத்தும் வெயிலில் இருந்து காத்துக்கொண்டனர். நாட்டின் சுதந்திரத்திற்கு போராட்டிய தியாகிகளை வெயிலில் அமரவைத்து அரசு ஊதியம் பெறும் அதிகாரிகளுக்கு மட்டும் நிழலா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.