கடந்த இரண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போல, அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு, வதோதரா, வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மோடி, இரண்டையும் கைப்பற்றினார்.


பின்னர், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு, வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். இச்சூழலில், அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தென் மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.


வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி?


குறிப்பாக, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் தொகுதியில் இருந்து மோடி போட்டியிடப் போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில், "வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை விரும்புகிறார்கள். வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார். ரேபரேலி, வாரணாசி, அமேதி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு போட்டி கடினமாக இருக்கும்" என்றார்.


அஜித் பவார் - சரத் பவார் ரகசிய சந்திப்பு:


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு குறித்து பேசிய அவர், "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசும்போது, சரத் பவாரும், அஜித் பவாரும் ஏன் சந்திக்க பேசக் கூடாது?


நேற்று சரத் பவாரும் அஜித் பவாரும் சந்தித்துப் பேசினர் என்றும், இது குறித்து சரத் பவார் விரைவில் பேசுவார் என்றும் ஊடகங்கள் மூலம் அறிகிறோம். இந்தியா கூட்டத்திற்கு அஜித் பவாரை சரத் பவார் அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மகாராஷ்டிராவின் இரண்டு துணை முதலமைச்சர்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.


அரசியலில் எதுவும் நடக்கலாம். அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மகாராஷ்டிர மக்கள் தற்போதைய இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்" என்றார்.


மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.