பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைக்க செங்கோட்டைக்கு வந்தடைந்த பின் நாட்டின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி. 






பின் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் எனது குடும்பம். இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.  மக்களின் அனைத்து சங்கடங்களுக்கும்  விரைவில் முக்தி கிடைக்கும். இந்தியாவில் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான அனைத்து முயற்சிகளும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும். இந்தியா மணிப்பூருக்காக உள்ளது. மணிப்பூர் மக்களுக்காக இந்தியா உள்ளது.  மேலும், இம்முறை இயற்கை பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், “ 1947 ஆம் இந்தியா சுதந்திரம் அடைந்தது.  இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளது.  இவை மூன்றும் சேர்ந்து தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.  தற்போது நாம் எடுக்கப்போகும் முயற்சிகள், முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளில் இந்தையாவின் வரலாற்றை பன்மடங்காக உயர்த்தும். மேலும் அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெறுமை இந்தியாவிற்கு சேரும். இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு திறன் படைத்தவர்கள். அதுமட்டுமின்றி இதற்கான சிறப்பு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பயன்பெறுகிறார்கள். இந்நாட்டில் வாய்ப்புகளுக்கு எந்த பஞ்சமுமில்லை. எல்லையற்ற வாய்ப்புகளை வழங்கும் திறன் நாட்டிற்கு உள்ளது.  


கொரோனா நோய்த்தொற்றுக்கு பின், ஒரு புதிய உலகு உருவாகி புதிய புவி-அரசியல் சமன்பாடு வடிவம் பெறுகிறது. புவிசார் அரசியலின் வரையறை மாறுகிறது. இன்று, புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் 140 கோடி மக்களின் திறனைக் காணமுடிகிறது. இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உச்சங்களை கடக்கப் போகிறது என்பது உறுதி. இன்று, ஜி20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. கடந்த ஆண்டில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் G20 இன் பல நிகழ்வுகள் நடைபெற்ற விதம், இந்தியாவின் சாமானிய மக்களின் திறனை, இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகிய மூன்றும் நாட்டை மாற்றுகின்றன.  


2014 ல் ஆட்சிக்கு வந்தபோது, ​​உலகப் பொருளாதார அமைப்பில் 10 வது இடத்தில் இந்தியா இருந்தது. இன்று, 140 கோடி இந்தியர்களின் முயற்சியால், ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம். நாட்டை தன் பிடியில் வைத்திருந்த ஊழல் அரக்கனை அழித்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம். பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா திட்டத்தை அரசாங்கம் அடுத்த மாதத்தில் தொடங்கும்” என உறுதியளித்துள்ளார்.


மேலும், “ உலகம் இன்னும் கொரோனாவில் இருந்து மீளவில்லை. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் தன் பிடியில் வைத்துள்ளது. நமது தேவைக்கு ஏற்ற பொருட்களை இறக்குமதி செய்யும் போது, ​​பணவீக்கத்தையும் இறக்குமதி செய்வது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இந்தியா பணவீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. உலகின் மற்ற நாடுகளை விட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தியடைய முடியாது. பணவீக்கத்தின் சுமை எனது நாட்டின் குடிமக்கள் மீது குறைவதைக் காண நான் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் அந்த நடவடிக்கைகளை எடுப்போம், எனது முயற்சிகள் தொடரும்.  நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், பணவீக்கததை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் தொடரும். புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என 25 வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் அதனை நிறைவேற்றியுள்ளோம்.


நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் அரசு இது. இது புதிய இந்தியா. அதுமட்டுமின்றி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒன்று பெண்கள் தலைமையிலான வளர்ச்சி. இன்று, சிவில் ஏவியேஷன் துறையில் அதிக எண்ணிக்கையிலான விமானிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன் சொல்லலாம். சந்திரயான் திட்டத்தை பெண் விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஜி20 நாடுகளும் அங்கீகரித்து வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என்பது மோடியின் உத்தரவாதம்.


எல்லைக் கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. அந்த எண்ணத்தை மாற்றினோம். அவை நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல. எல்லையில் நீங்கள் பார்ப்பது எனது நாட்டிலேயே முதல் கிராமம். இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இந்த எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த 600 பேர் செங்கோட்டைக்கு வந்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒற்றுமை என்ற பாதையில் பயணிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


அதுமட்டுமின்றி, “2047ல் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​நாடு வளர்ந்த இந்தியாவாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது நாட்டின் திறன் மற்றும் கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். ஆனால், ஊழல், வம்சம் மற்றும் சமாதானம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவை. இன்று குடும்ப அரசியலும், சமாதானமும் நம் நாட்டை அழித்துவிட்டது. ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பம் மட்டும் எப்படி பொறுப்பாக இருக்கும்? அவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மந்திரம் என்பது குடும்பத்தின் கட்சி, குடும்பத்துக்கான கட்சி மற்றும் குடும்பத்திற்காக கட்சியாக தான் உள்ளது. 2019ல், செயல்திறனின் அடிப்படையில், நீங்கள் என்னை மீண்டும் ஒருமுறை பிரதமராக தேர்ந்தெடுத்தீர்கள். அடுத்த ஐந்தாண்டுகள் வரலாறு காணாத வளர்ச்சிக்கானது. 2047ன் கனவை நனவாக்கும் மிகப்பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்து ஆண்டுகள். அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி , இந்த செங்கோட்டையில் இருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் முன்வைப்பேன்” என பேசியுள்ளார்.