கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு பெரும் போராட்டத்திற்கு பிறகே சுதந்திரம் கிடைத்தது. அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது.


 



எண்ணற்ற இந்தியர்களின் தன்னலமற்ற தியாகங்களும், அவர்கள் வழிநடத்திய சுதந்திரப் போராட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. நாட்டு மக்களால் மகாத்மா என போற்றப்படும் காந்தி அவர்களின் சுகந்திர வேட்கை அளப்பறியது. அப்படியான அன்பானவருக்கு மதுரையில் இருக்கும் நினைவிடம் ஓர் அடையாளம்.



மகாத்மா காந்தியின் வாழ்வில் ’மதுரை மண்’ பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்றே சொல்ல வேண்டும். அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த அந்த மாமனிதன் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது மதுரை  காந்தி நினைவு அருங்காட்சியகம். 1948- ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார்.  அதற்கு பிறகு இந்திய திருநாட்டின் முழுவதும் 7 காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் தென்னிந்தியாவின் முழுமைக்குமாக மதுரையில் தான் காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் இந்த 7 அருங்காட்சியகத்திலும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி பயன்படுத்திய 14 அசல் பொருட்களும், 32 மாதிரி பொருட்களும் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

 


 

உத்தமர் காந்தி எனும் மாமனிதனை அரையாடைப் பக்கிரியாக உலகிற்கு அடையாளம் காட்டி மகாத்மாவாக மாற்றிய மதுரை மண்ணில், அவரது குருதி தோய்ந்த உடையும், அந்த சமயம் காந்தி அணிந்திருந்த ஆடைகளும் இன்றும் அமைதியின் சாட்சியாய் நிற்கின்றன. மகாத்மாவின் மறைவிற்குப் பிறகு இந்தியாவின் முதல் அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அன்றைய இந்தியப் பிரதமர் நேருவால் கடந்த 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் திறந்து வைக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விஜயநகர பேரரசின் பெண் அரசியான ராணி மங்கம்மாளின் வெயில்கால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகழ்ந்த கட்டிடம்தான் பின்னாளில் காந்தி நினைவு அருங்காட்சியகம் மாற்றம் பெற்றுள்ளது.

 



 

அப்போது காந்தியின் பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், உடைகள், சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் சால்வைகள் இந்த அருங்காட்சியகத்திற்குதான் வழங்கப்பட்டன. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தைப் போன்றே மாதிரியாகக் கட்டப்பட்ட கல்லறையும் காந்தியின் அஸ்தியை சுமந்தவாறே மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ளது. மிக அமைதியான சூழலில் காந்தியின் குருதி தோய்ந்த ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகம் நேர்த்தியாகத் தற்போதும் பராமரித்து வருகிறது. சுடப்பட்டு நான் மரணம் அடைய நேர்ந்தால் முணு முணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர் நீக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்' எனும் காந்தியின் வாக்கு மூலம் அத்திருவறையின் முன்பாக எழுதப்பட்டு, அவர் கொண்ட இலட்சிய வேட்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.



 


காந்தி எனும் மாமனிதன் மறைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும்கூட அவரை நாம் நினைக்கிறோம், வாசிக்கிறோம் என்றால், அந்தத் தாக்கத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடியாது. வாழ்க நீ எம்மான்...! வையத்து நாட்டிலெல்லாம்...! முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்.,,,,! புவிக்குளே முதன்மையுற்றாய்...!




 


பேரமைதி நிலவும் இந்த மதுரை காந்தி நினைவு வளாகத்தின் உள்ளே, காந்திய தத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் ஏதோ ஒரு வகையில் நம்மை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்களாக வந்து குவிகின்றனர். காந்தியக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில் இங்கு செயல்படும் கல்வி மையம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. தேசத்தின் விடுதலைக்காக ஓடியாடித் திரிந்த அந்தப் பெருமகனின் நினைவுத்தடங்கள் மதுரையின் வரலாற்றுச் சுவடுகளாய் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. அதனை வருங்கால தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக வரலாற்று சின்னமாய் மாற்றி பாதுகாக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் வேண்டுகோளாக உள்ளது.