நாட்டின் 77வது சுதந்திரதினத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ”மக்கள் நேரடியாக தொடர்பில் உள்ள கல்வி உள்ளிட்டவை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் எனவும், கல்வி மாநிலப்பட்டியலுக்கு வந்தால் நீட் போன்ற கொடூரமான தேர்வுகள் முற்றிலுமாக அகற்றப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொடி வெறும் கொடி மட்டுமல்ல கோடான கோடி மக்களின் மணி முடி, சுதந்திர இந்தியாவுக்கு போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும், அவர்களை பெற்றெடுத்த குடும்பங்கள் இருக்கும் திசைநோக்கி வணங்குவோம் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆட்டோ ஓட்ட விரும்பும் மகளிர் மற்றும் இல்லாமல் திருநங்கைகளும் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமச்சர் கூறினார்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்த நாட்டில் உள்ள பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அளவிடுவேன் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர் வழியில், பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்ய கொண்டுவரப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் மாதம் ரூபாய் 1,000 என்று கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவிகளுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஓலா, ஊபர்,ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் 25 முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு இனி ’விடியல் பயணம்’ என பெயர் சூட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு பேசிய அவர், ”மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர்வேண்டும். சமூக நீதி, சமத்துவம் சகோதரத்துவம், சமதர்மம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அத்தகைய சமத்துவ, சமதர்ம சமூக நீதி இந்தியாவை உருவாக்குவதுதான் தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு அழிப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.