வாடிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நல்லகாமன், ஒத்திக்கு இருந்த வீட்டை காலி செய்வது தொடர்பாக கடந்த 1982ஆம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக காவல் துறைக்கு புகாரும் சென்றது. அதனடிப்படையில், நல்லகாமன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை சீனியம்மாள் ஆகியோரை கடந்த 1982ஆம் ஆண்டு காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது உதவி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட காவல் துறையினர், நல்லகாமனின் ஆடைகளை களைந்தும், சீனியம்மாளின் சேலையை அவிழ்த்தும் லாக்கப்பில் வைத்து கொடுமைப்படுத்தினர். இது தொடர்பாக காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, கடந்த 2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து காவல் துறையினரை விடுவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நல்லகாமன், தனக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமாரும், நல்லகாமனும் உயிரிழந்தனர். இதனால், நல்லகாமனின் மகன் சுந்தரபாண்டியன் வழக்கை தொடர்ந்து நடத்திவந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், "உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ததால், இழப்பீடு வழங்க முடியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. சந்தேகத்தின் பலனை கருத்தில்கொண்டே உச்ச நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.
காவல் துறையின் தரப்பில் வன்முறையும், மனித உரிமை மீறலும் நடந்துள்ளது. அப்பாவிகள் மேல் போலீசாரின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது. நல்லகாமன் இப்போது உயிருடன் இல்லாததால், அவரது கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கோவை திமுக பிரச்சாரத்தில் திருமாவளவன் மிஸ்ஸிங்... எதிர்ப்பை தொடர்ந்து போட்டோ சேர்ப்பு!