புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றுபவர் ஜெய்சங்கர். இவரது வீடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கிருஷ்ணா நகரில் அமைந்திருக்கிறது.  இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. 


அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்ட் ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பத்மாவதி மற்றும் காவல் துறையினர் தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்றனர். சோதனையைத் தொடங்கிய அவர்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். மேலும் ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


இதையடுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஜெயசங்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கு வழக்குகள் சரியாக உள்ளனவா? என்று ஆய்வு செய்தனர்.




வீடு மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் நேற்று தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணிக்கு நிறவடைந்தது. சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ. 5 லட்சம் ரொக்க பணம்  மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்க பணம், ஆவணங்கள் மட்டுமின்றி 100 பவுன் தங்க நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ரெய்டு குறித்து போலீசார் கூறுகையில், “ வட்டார போக்குவரத்து அலுவலராக சேலம், நாகப்பட்டிணம், கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜெய்சங்கர் பணியாற்றினார். அவர், தனது அலுவலகத்திற்கு வருபவர்களிடம் பல வழிகளில் லஞ்சம் பெற்றுள்ளார். ஆனால் அவர் நேரிடையாக பணத்தை வாங்காததால், பணம் கொடுப்பவர்கள் செய்வதறியாது இருந்தனர். 




ஜெய்சங்கர், லஞ்சமாக பணம், நகை பொருட்களை வாங்கியது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது வீட்டிலும் அவருக்கு சம்பந்தமான இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டோம். 


நாகப்பட்டினம் மற்றும் வெளி மாவட்டங்களில் வீடு, தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவைகளை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது ஜெய்சங்கரிடம், தீவிர விசாரணை நடத்திவருகிறோம்.  அவரிடம் இருக்கும் பணம், தங்க நகைகள், இடம், வீடுகள் குறித்த ஆவணங்களை சரிபார்த்து வருகின்றோம். 


உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் அவை ஜெய்சங்கரிடமே மீண்டும் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்கள் இல்லை என்றால் அந்த ஆவணங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 


அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடர்பாக பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். அவர்களைப் பற்றிய தகவல்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண