வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 4,572 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1130 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.




கோவை மாநகராட்சியில் திமுக 74 வார்டுகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 26 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 93 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டில் போட்டியிடுகிறது.




இதனிடையே வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வது வார்டில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2011 முதல் 2016 வரை கோவை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர். நா.கார்த்திக் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கார்த்திக் பதவி வகித்து வருவதால், இலக்குமி இளஞ்செல்விக்கு மேயர் வேட்பாளராக முன் நிறுத்த வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கலுக்கு பிறகு இலக்குமி இளஞ்செல்வி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.




இதனிடையே இலக்குமி இளஞ்செல்வி சார்பில் வாக்கு சேகரிக்கும் வகையில் ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், ராகுல் காந்தி, சோனியா காந்தி, அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் பெரியளவில் போடப்பட்டு இருந்தது. மேலும் கி.வீரமணி, கே.எஸ். அழகிரி, ஈஸ்வரன், வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ஜவாஜிருல்லா, அதியமான், வேல் முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்களின் படங்கள் சிறியளவில் போடப்பட்டு இருந்தன. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகைப்படம் இடம் பெறததால், சர்ச்சை எழுந்தது.




இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. திட்டமிட்டு திருமாவளவன் படம் நோட்டீசில் தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும், சாதி கண்ணோட்டத்தில் திமுகவினர் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து திருமாவளவன் படம் இல்லாத நோட்டீஸ் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது. மேலும் தொல்.திருமாவளவன் படம் உள்ள புதிய நோட்டீஸ் பதிவிடப்பட்டுள்ளது.