தொடர் கனமழை:
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு வினாடிக்கு இன்று அதிகாலை வரையில் 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து வருவதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
வைகை அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து:
தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு காலை நிலவரப்படி மூல வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 6,800 கன தண்ணீரும், முல்லைப் பெரியார் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியார் ஆற்றில் 6300 கன அடியும், போடி கொட்டக்குடி ஆற்றில் இருந்து 1900 கன அடி தண்ணீரும் மொத்தம் வைகை அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 65.55 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 4753 மில்லியன் கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3169 கன அடியாக தற்போது உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அதேபோல பெரியகுளம் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அறிவுறுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் கன மழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.